மனிதநேய மக்கள் கட்சி
மனிதநேய மக்கள் கட்சி 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் நாள் தாம்பரத்தில் பெரும் மக்கள் வெள்ளத்தில் நடைபெற்ற தொடக்க விழா மாநாட்டில் தொடங்கப்பட்டது. இந்தியத் தேர்தல் ஆணையத்தில் அதே மாதத்தில், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக விளங்குகின்றது.

நோக்கம்
மனிதநேய மக்கள் கட்சி, “சேவை அரசியலின் மனசாட்சி” என்ற முழக்கத்துடன்,
• கண்ணியமான பொது வாழ்வு
• நேர்மையான அணுகுமுறை
• சேவை சார்ந்த அரசியல்
- என மாற்று அரசியல் களத்தை வலிமைப்படுத்தும் நோக்கோடு உருவாக்கப்பட்டது தான் மனிதநேய மக்கள் கட்சி (மமக).
சிறுபான்மை மக்களின் அரசியல் வெற்றிடத்தை உரிய வகையில் பூர்த்தி செய்யும் வகையில், அம்மக்களின் வலிமையான அரசியல் குரலாக உருவெடுத்திருக்கும் மமக; பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களையும் உள்வாங்கி; அரவணைத்து; அரசியல் களத்தை விரிவுபடுத்தி பணியாற்றி வருகிறது.
• சமூக நீதி
• சமூக நல்லிணக்கம்
• சமத்துவ ஜனநாயகம்
- என்ற முப்பெரும் முழக்கங்களோடு மக்கள் பணியாற்றி வருகிறது.
தமிழகத்தின் வாழ்வாதாரங்களுக்காகவும், தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும் சமரசமின்றி குரல் கொடுத்து வரும் மமக, நலிந்த பிரிவினர்களின்; சமூகங்களின் புகலிடமாகவும் திகழ்கிறது.சுருக்கமாக, அரசியல் களத்தில் நேர்மையும்; நாணயமும்; ஒழுக்கமும்; நன்மைகளும் தழைத்தோங்கிடவும், லஞ்சம் முதலியன தீமைகள் தகர்த்தெறியப்படவும் இடையறாது பாடுபடும் நோக்கத்துடன் கட்சி தொடங்கப்பட்டது.
நடத்திய போராட்டங்கள்
மனிதநேய மக்கள் கட்சி மக்கள்நலன் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்காகக் களத்தில் போராடி வருகின்றது
மதுவை ஒழிப்போம்; மக்களைக் காப்போம்
மனிதநேய மக்கள் கட்சி. தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 2010ம் ஆண்டு மார்ச் 7 ஆம் நாள் மதுக்கடைகள் முற்றுகைப் போராட்டம் நடத்தியது.
மது, மதுக்கடைகளுக்கு எதிரான பரப்புரை யுத்தத்தை 2012 டிசம்பர் 20 முதல் 30 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மிகுந்த எழுச்சியோடு மமக நடத்தியது. துண்டுப் பிரசுர வினியோகம், சுவரொட்டிகள், சுவர் எழுத்துக்கள், வாகனப் பரப்புரைகள், மது எதிர்ப்பு முழக்கங்கள், ஊடக விளம்பரங்கள், குறுந்தகடு பரப்புரை, வீதிமுனைக் கூட்டங்கள் என 8 அம்ச வியூகங்களோடு 1 கோடி மக்களிடம் மதுவுக்கு எதிரான பரப்புரை கொண்டு சேர்க்கப்பட்டது. தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என சட்டசபைக்கு உள்ளேயும், சட்டசபைக்கு வெளியையும் போராடுகிறது மமக!
முல்லைப் பெரியாறும்; கேரளாவின் தகராறும்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வந்த நிலையில், கேரள அரசின் தவறான அணுகுமுறைகளைக் கண்டித்தும், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நீராதார உரிமைகளைக் காக்கும் வகையிலும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், பெருநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களை 2012 இல் மமக நடத்தியது.
காவிரி நீரும்; வாடிய விவசாயிகளும்
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கையும்; மத்திய அரசின் அலட்சியத்தையும் கண்டித்து, காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளை ஒருங்கிணைத்து திருவாரூரில், தலையில் முண்டாசு கட்டி அக்டோபர் 12, 2012 இல் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது மமக!
கர்நாடக அரசு தொடர்ந்து பிடிவாதம் செய்தால், நெய்வேலியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் கர்நாடகாவுக்கு கொடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி 22.10.2012 இல் நெய்வேலி அனல் மின் நிலையத்தையும் முற்றுகையிட்டது. ஆயிரத்திற்கும் மேலானோர் கைதாகி விடுதலை ஆனார்கள்.
மீனவர்களும்; எதிர்நீச்சலும்
தமிழகக் கடற்கரையோரம் கடலோடு போராடும் மீனவர்களின் துன்பங்களில் தொடர்ந்து பங்கெடுத்து அவர்களுக்கான ஆறுதல் களமாகச் செயல்பட்டு வருகிறது மமக. இதற்காகப் பல முறை சென்னையில் உள்ள இலங்கையின் துணை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தியுள்ளது.
இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் துன்புறுத்தப்படும் தொடர் அநீதிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் என மீனவர்களின் வாழ்வுரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறது.
கூடங்குளம் அணுஉலை விவகாரத்தில் அதைச் சுற்றி வாழும் மண்ணின் மைந்தர்களின் சம்மதமின்றி அங்கு அணுஉலைகளை இயக்கிட மத்திய அரசு முயலக்கூடாது என்ற அம்மக்களின் கோரிக்கையைப் பல களங்களிலும் உறுதியாக ஆதரித்து வருகிறது மமக!
அம்மக்களின் மீது அரசும், காவல்துறையும் நடத்திய முற்றுகையையும், அரச வன்முறைகளையும் கண்டித்து முதலில் களமிறங்கி குரல் கொடுத்தது. அம்மக்களின் நியாயத்தை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் மேடை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், போராட்டங்கள் எனத் தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
மேற்கு தமிழக மாவட்டங்களில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்கள பதிப்பதை எதிர்த்தும், காவிரி படுகை மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்தும் போராட்டக் களம் கண்டிருக்கின்றது மனிதநேய மக்கள் கட்சி
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டிற்கு எதிர்ப்பு
இந்தியாவில் வருடத்திற்கு 20 லட்சம் கோடிகள் புழங்கும் பெரு வணிகமான சில்லறை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீடுகளை அனுமதிக்கும் நடுவண் அரசின் முடிவை எதிர்த்து தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 2012 நவம்பர் 23, 24, 25 தேதிகளில் துண்டுப் பிரசுர பரப்புரை இயக்கம் நடத்தப்பட்டது. அதன் அபாயங்கள் பற்றிய புள்ளி விபரங்களைப் பாமரரும் புரியும் வகையில் விளக்கி மமக வினியோகித்த துண்டுப் பிரசுரங்கள், உண்மை நிலவரங்களைப் பொதுமக்கள் புரிந்துகொள்ளவும், மக்களிடையே பெரும் மனமாற்றத்தையும் ஏற்படுத்தியது. இதை வேறு எந்த அரசியல் கட்சிகளும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்ஷ தலைமையிலான சிங்கள பயங்கரவாதிகளை கைதுச் செய்து சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைக்கு நிறுத்த வேண்டும் என்று முதன் முதலில் 2009ல் கோரிக்கை வைத்த கட்சி மனிதநேய மக்கள் கட்சி
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாகச் சளைக்காமல் போராடி கொண்டிருக்கும் கட்சி மனிதநேய மக்கள் கட்சி
14 ஆவது சட்டமன்றத்தில் இடம் பெற்று, மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பேராசிரியர் எம்.எச்.. ஜவாஹிருல்லா அவர்களும், அஸ்லம் பாஷா அவர்களும் சிறப்பாகத் தமிழக மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வந்தார்கள்.
அருந்ததியர் உள்ஒதுக்கீடும்; மமகவும்
ஒடுக்கப்பட்ட மக்களில், மிகவும் ஒடுக்கப்பட்டவர்களான அருந்ததி இன மக்களுக்கு 3 சதவீத தனி இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க சட்டமன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சி வலிமையாக குரல் கொடுத்தது. அச்சமுதாயத் தலைவர்கள் மமகவின் முன்முயற்சிகளுக்காக மமகவை மனமாரப் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
மனிதநேய மக்கள் கட்சியின் 10ம் ஆண்டு விழாவையொட்டி தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா தலைமையில் கோட்டை முதல் குமரி வரை கொடியேற்று நிகழ்ச்சிகளும் நலத் திட்டங்கள் வழங்கும் நிகழ்வுகளும் 2018 பிப்ரவரி 7 முதல் நடைபெற்றன.