மனிதநேய மக்கள் கட்சியின் கொள்கை

கொள்கை மற்றும் குறிக்கோள்

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீதும்; சமதர்மம், சமயசார்பின்மை மற்றும் மக்களாட்சி தத்துவம் ஆகிய கோட்பாடுகளின் மீதும் உண்மையான நம்பிக்கையும் பற்றும் கொண்டதாக கட்சி விளங்கும்.

இந்தியாவின். இறையான்மையையும், ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்கும் வகையில் கட்சி இயங்கும்.

குறிப்பாக


1) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ள குறிக்கோள்களான நீதி, சுதந்திரம், சமநிலை மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை அடையும் வகையில் கட்சியின் கொள்கை மற்றும் குறிக்கோள் அமையும்.


2) மனிதநேய மக்கள் கட்சி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும்; சமத்துவ, சமயசார்பற்ற மக்களாட்சித் தத்துவங்களின் மீதும் உண்மையான நம்பிக்கையும் விசுவாசமும் கொண்டிருக்கும் என்றும் இந்தியாவின் இறையாண்மையையும், ஐக்கியத்தையும், ஒருமைப்பாட்டையும் மேலோங்க பாடுபடும்.


3) இந்திய நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டு முஸ்லிம்கள் உள்ளிட்ட பட்டியலினத்தார், பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும் அரசியல் கட்சியாகும்.


4) மனிதநேய மக்கள் கட்சி அனைத்துத் தரப்பு மக்களையும் தன்னகத்தே இணைத்து கட்சியின் செயல் திட்டங்களான சமூக நீதி, சமூக நல்லிணக்கம், அமைதி, பொருளாதார மேம்பாடு, மக்கள் தொண்டு என அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும்.


5) உள்நாட்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் குரல் கொடுக்கும் அதே வேளையில், சர்வதேசக் கொடுங்கோன்மையையும், வல்லாதிக்கத்தையும் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளையும் எதிர்த்து கட்சி தொடர்ந்து குரலெழுப்பும், போராடும்.


6) நாட்டில் நிலவும் சாதியத்தையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்துப் போராடும், மேலும் மத சகிப்பின்மைக்கு எதிரான மற்றும் நாட்டின் ஒற்றுமை உணர்வுக்கு எதிரான சக்திகளையும் எதிர்த்துப் போராடும்.


7) சமூகத் தீமைகளான மது, சூது, ஆபாசம், வட்டி, வரதட்சணை, தீண்டாமை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என பலதரப்பட்ட தீமைகளுக்கு எதிராக கட்சி போராடும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் அரசியல் களத்தில் நேர்மையும், நாணயமும், ஒழுக்கமும் நன்மைகளும் தழைத்தோங்கிடவும், தீமைகள் தகர்த்தெறியப்படவும் இடையறாது பாடுபடும்.


8) மனிதநேய மக்கள் கட்சி தனது செயல்திட்டங்களை நிறைவேற்ற நாட்டின் அரசியலமைப்புச் சட்ட ரீதியாக தேர்தல்களிலும் இதர அதிகார அமைப்புகளிலும் பங்கெடுக்கும்.