பத்திரிக்கையாளர்களை குரங்கு என்று தரக்குறைவாக பேசிய அண்ணாமலையின் பேச்சுக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் பத்திரிக்கையாளர்களை “ஊர்ல இருக்கிற நாய், பேய், சாராயம் விற்கிறவனுக்கெல்லாம் நான் பதில் சொல்லணுமா..? மரத்தின் மீது குரங்கு தாவுவதைப் போல் ஏன் சுற்றி சுற்றி வருகிறீர்கள்?” என்று ஒருமையில் பேசியுள்ளார். இது அங்கிருந்த பத்திரிகையாளர்களை மட்டுமல்லாமல் ஊடகத்துறையின் மீது ஆர்வமுள்ள அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முன்னதாக கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது போலீஸுக்கு முன்பே பாஜக தலைவர் அண்ணாமலை சில தகவல்களை வெளியிட்டது ஏன் என கேள்வி எழுப்பிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தேசிய புலனாய்வு முகமை முதலில் விசாரிக்க வேண்டிய நபர் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைதான் என்றார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி வைத்துள்ள நேர்மையான குற்றச்சாட்டுக்கு எதிர்வினையாற்றாமல் கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களை குரங்குடன் ஒப்பிட்டுப் பேசிய அண்ணாமலைக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

நயத்தகு நாகரிக அரசியலை விடுத்து அநாகரிக அரசியலை தமிழகத்தில் புகுத்தத் துடிக்கும் அண்ணாமலை அவர்களுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

இவண்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி